சமூக ஊடகங்களில் சாதிய கொலையை ஆதரித்து எழுதுபவன் எடுத்து சொல்லி புரிய வைக்கப்பட வேண்டியவன் அல்ல அவன் ஒரு சாக்கடை அப்புற படுத்தப்பட வேண்டியவன். ஆனால் சாதிய வக்கிரம் பற்றிய அரைவேக்காட்டுத்தன புரிதலோடு இருப்பவன் அது பற்றிய தெளிவான விளக்கத்தோடு வென்றெடுக்கப்பட வேண்டியவன் .
அதிகபட்சமாக இவர்களிடம் இருக்கும் சிந்தனைச் சரக்கு இவ்வளவு தான்
கல்வி நிலையங்களில் சாதி சான்றிதழ் கேட்பதால் தான் சாதி இருக்கிறது .
இட ஒதுக்கீடு இருப்பதால் தான் சாதி இருக்கிறது
இதை இரண்டு விதமாக அணுகலாம்
சாதி சான்றிதழும் இட ஒதுக்கீடும் இருப்பதால் தான் இன்றளவும் சாதி இருக்கிறது என்கிறார்கள் .உண்மையில் இது இரண்டும் வேறு வேறானது அல்ல. இரண்டுமே ஒன்று தான் .அதாவது இட ஒதுக்கீடுக்காக மட்டும் தான் சாதி சான்றிதழ் என்பதே தேவைப்படுகிறது. இன்ன பிற உதவித் தொகைகளும் இதிலே தான் அடக்கமாகிறது.இதை தாண்டி வேறு எந்த தேவையும் இல்லை அதற்கு...
முதலாவதாக, சாதி சான்றிதழ் இருப்பதால் தான் சாதி இருக்கிறது என்பது
மருத்துவமணை இருப்பதால் தான் நோய் இருக்கிறது . காவல் நிலையம் இருப்பதால் தான் குற்றங்கள் நடக்கிறது .
புகார் பெட்டி இருப்பதால் தான் புகார்களும் இருக்கின்றன என்பதை போன்ற பார்வை தான் .
அடுத்தது, சாதி சான்றிதழ் என்பது இந்த சமூகத்தில் சாதியால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பகுதி மக்களுக்கும் மற்றவர்களை போல சம உரிமை வேண்டும் என்பதற்காக அவர்கள் தனியாக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு அமைப்பு முறை
காலம் காலம் ஒடுக்கி வைக்கப் பட்டிருந்த ஒரு சமூகமும் அவர்களை அடக்கி ஆண்ட சமூகமும் எப்படி சமமாக நடத்தப்பட முடியும்.
சமத்துவமில்லா சமூகத்தில்
சமமான நீதி என்பது எப்படி சமூக நீதியாக இருக்க முடியும்.
அதற்காக இந்த முறைமை எப்போதும் வேண்டும் என்பதல்ல நம்முடைய நிலைபாடு.இட ஒதுக்கீடு என்பது ஒரு சீர்திருத்த நடவடிக்கையே .அதிலும் நாம் தோற்று விட்டோம் என்பது கண்கூடு.இதனால் சமூக நீதியில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை.இட ஒதுக்கீட்டுக்கு உள்ளே உள்ள சில ஆதிக்க சாதிகள் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்து கொண்டு அவர்கள் ஒரு தனி சாதியாக மாறியது தான் மிச்சம்.இருந்தும் இது மீண்டும் பழைய அடிமையை நிலையை தடுக்க சிலபேரை அதிகார அமைப்பிலிருந்து ஒதுக்கி வைக்க இப்போதும் தேவையே
அரசு மாறும் போது கொள்கை மாறும் . கொள்கை மாறும் போது உற்பத்தி முறை மாறும்.உற்பத்தி முறை மாறும் போது சமூகம் மாறும் .சாதி என்பது நிலவுடமையோடு தொடர்புடையது என்பது தான் வரலாறு.
சோசலிச சமூகத்தில் இட ஒதுக்கீடோ சாதி சான்றிதழோ தேவைப்படாது ஏனெனில் அங்கு சாதியே இருக்காது . சாதியை நிலைத்திருக்க செய்யும் சமூக காரணிகள் அகற்றப்படும்...
அதிகாரத்தை கைப்பற்றுவதே ஒரே தீர்வு...
0 comments:
Post a Comment